``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.
ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்… கண்ணு… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்… மகனே நினைவில்வைத்துக்கொள்… உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’
அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்… ``மகனே… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்… மகனே… எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’
மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்… மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்… `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்… மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’
அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்.