குடல்புண் ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி! நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ 'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந் தேயாமதி முகத்தாய் செப்பு' துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும்.
காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும் என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது. நம்முடைய முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். அதைப் போன்ற சிறப்புவாய்ந்த கீரை வகைகளை நாம் அதிகம் கண்டுகொள்வதே இல்லை.
எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளர்ந்து, எண்ணற்ற நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ அதன் சிறப்புகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்... 'துத்திக் கீரை' பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி.
இதற்கு 'அதிபலா' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் 'Indian mallow ' என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது.
இதன் காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது `பணியாரத் துத்தி.’