அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது…

இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை ஆகி சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது.

முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.

துறை சார்ந்து, அறம் தவறியவர்களாக சினிமாவில் காட்டப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும் தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

சினிமா நடிகர்கள் நடிகைகள் கிசுகிசுக்கள் முக்கியமற்று போய் விட்டன.

நிமிர்ந்து ஏறிட்டு இது வரை பார்க்கப்படாத துப்புறவுத் தொழிலாளர்களின் கால்கள் பாதபூஜை செய்யப்படுகின்றன.

ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. இத்தாலியிலும் இதே கதைதான்.

உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன.

சுமா‌ர் 1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். தாய்பாசம் அனைத்திற்கும் மேலானது என்பது உணரப்படுகிறது.

சுமா‌ர் 65 வயது கணவர் வலியால் துடிக்கும்தன்மனைவியைசைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஆக, இறுதியில் பாசம் மட்டுமே ஜெயிக்கிறது என்பது புலனாகிறது.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம், வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்து, கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்தி, மகிழ்ச்சியாக நடைபெறு‌கிறது.

குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் மஞ்சள் கலந்த பாலும் , மிளகு ரசமும் வந்துவிட்டது. கசக்கும் வேம்பு இன்று அனைத்து வீடுகளிலும்!

மேக்கப் இல்லாமல், முகம் கோணாமல், சமைக்கும் மனைவி அழகாக தெரிகிறாள்.

பெரியவர்களிடம் பேசினால் போர் அடிக்காது என்று உணர்கிறார்கள் குழந்தைகள்.

இவ்வருடம் தங்கம் இல்லாமல் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ஆம்..! புவி தன்னை தானே சுத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது.

நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *