சூஃபி குரு ஒருவர் இறைச் சிந்தனையோடு வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்…
அப்போது எதிரே வந்த இறைமறுப்பாளன் ஒருவன் திடீரென்று சூஃபி குருவின் முகத்தில் எச்சிலைக் காறித் துப்பி விட்டான்.
அமைதியாக தன் மேல்துண்டால் அதைத்
துடைத்துக் கொண்டு…
"வேறு ஏதும் சொல்ல விரும்புகிறாயா…?" என்றார் சூஃபி குரு.
இறைமறுப்பாளன் புரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சூஃபி குரு
மேலே பார்த்து புன்சிரித்தபடி சொன்னார்…
"கடவுளே, இவர் ஏதோ சொல்ல விரும்பியிருக்கிறார்.
அவருக்கு வார்த்தைகள் கிடைக்காத்தால் இந்த செயலை செய்து விட்டார்…இவரை மன்னித்து விடலாம்…"
எச்சில் துப்பியவனுக்கு அன்று இரவு முழுவதும்
தூக்கம் கெட்டுப் போனது.
குற்ற உணர்வோடு அடுத்த நாள் காலை அந்த சூஃபி குருவைத் தேடி அலைந்தான்.
குளக்கரையில் அமர்ந்து மீன்களோடு பேசி உறவாடிக் கொண்டிருந்தவரைக் கண்டு அவர் காலில் விழுந்து அழுதான்.
மீண்டும் மேலே பார்த்தபடி சூஃபி குரு சொன்னார்…
" கடவுளே… இப்போதும் கூட இவர் ஏதோ சொல்லத்தான் விரும்புகிறார்… ஆனால், வார்த்தைகள்
பலவீனமானதால் இப்படிச் செய்கிறார்…" என்றார்.
எழுந்தவன் கேட்டான்…
"ஐயா, நான் காரணமேயில்லாமல் காறித் துப்பிய போது நீங்கள் ஏன் என்னைத் திருப்பி அடிக்கவில்லை…?"
புன்முறுவலோடு சூஃபி குரு கேட்டார்…
" நண்பா, நீ எண்ணியது போல் எல்லாம் நடக்க நான் என்ன உன் அடிமையா ?"